
🔴 கருணை அடிப்படையில் அனோஜன் சிவராஜை விடுவிக்க கோரிக்கைகள்
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர் அனோஜன் சிவராஜை கருணை அடிப்படையில் மன்னித்து விடுதலை செய்யுமாறு அந்நாட்டில் பணிபுரியும் பல இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் சவூதி அரேபிய நீதித்துறையிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனோஜன் சிவராஜ் கைது செய்யப்படுவதற்கு முன்னரே தனது செயலுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரியிருந்தமை இந்தக் கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சவூதி அரேபிய நீதித்துறைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், அவை பரிசீலிக்கப்பட்டு, குறைந்தளவிலான தண்டனை வழங்கப்பட்டு அவர் விரைவில் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்ற நம்பிக்கையும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அனோஜன் சிவராஜின் குடும்பத்தினர் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பில் இன ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது சமூகங்களுக்கிடையே பதற்றத்தை தூண்டக்கூடிய வகையிலான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதை அனைவரும் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இதுகுறித்து சவூதி அதிகாரிகளிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
2026-07-04