கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம்: நிரந்தரத் தீர்வு அவசியம் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
www.iconicmediasl.com
விருட்ச வேந்தன்
இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், கொத்மலை நீர்த்தேக்கம் வழிந்தோடும் மட்டத்தை எட்டியுள்ளதுடன், கீழ்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்திருந்தாலும், ஆற்றங்கரையோர மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டி தொகுதிக்குட்பட்ட சேலம் பிரிட்ஜ் பகுதியிலுள்ள அல்-அஸ்ஹர் பாடசாலை உள்ளிட்ட பல இடங்கள் மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், 2022ஆம் ஆண்டிலேயே இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
தற்போது 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும், நாவலப்பிட்டி, கெலிஓயா, கம்பளை, பலந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நகரத் திட்டமிடல், முறையான வடிகால் அமைப்புகள், ஆற்றுப்படுகை பாதுகாப்பு மற்றும் ஆற்றங்கரையோர சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நீண்டகால தீர்வுகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பொறுப்புடைய அதிகாரிகள் அனைவரும் தங்களது கடமைகளை முழுப் பொறுப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான வெள்ளப் பாதிப்புகள் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, தேவையான நிதி ஒதுக்கீடுகளுடன் விரைவான மற்றும் நிலையான செயல் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.