🔴 வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு!

ஹரீஸ், அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு இடைக்காலத் தடை
கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு. சுகுணன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவதற்கு, வழக்கு முடிவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனங்கள் மற்றும் ஆடை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.