சம்மாந்துறை நீச்சல் தடாகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு!

0

பிரதேச சபை தவிசாளரின் துரித நடவடிக்கைக்கு உறுப்பினர் MLA கபூர் பாராட்டு

சம்மாந்துறை, செப். 11 — சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் பல மாதங்களாகச் செயற்பாடின்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீச்சல் தடாகம் நீண்டகாலமாகச் செயற்படாமல் காணப்படுவது தொடர்பில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ MLA கபூர் அவர்கள் கடந்த 18.06.2026 அன்று சமூக வலைத்தளங்கள், முகநூல், இணையத்தள செய்திச் சேவைகள் மற்றும் பத்திரிகைகள் ஊடாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த நீச்சல் தடாகம் சம்மாந்துறை பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதால், அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஐ.எல்.எம். மாஹீர் அவர்கள் துரிதமாக முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாக, பல மாதங்களாகச் செயலிழந்திருந்த நீச்சல் தடாகம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளமை பிரதேச மக்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் தடாகத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்காக துரித நடவடிக்கை எடுத்த பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஐ.எல்.எம். மாஹீர் அவர்களுக்கு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ MLA கபூர் அவர்கள் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்த சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர், சக பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீச்சல் தடாகம் மீண்டும் செயற்பாட்டுக்கு வருவதற்கு விடயம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டு ஆதரவு வழங்கிய ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நீச்சல் தடாகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதன் மூலம், சம்மாந்துறை பிரதேசத்தில் நீச்சல் விளையாட்டின் வளர்ச்சிக்கும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கௌரவ MLA கபூர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

— மின்மினி மின்ஹா | www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *