மட்டக்களப்பு இளைஞர்களின் கொள்கை முன்மொழிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக சமர்ப்பிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தினரின் கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கைசார் முன்மொழிவுகளை நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் நோக்கில் “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் (29) மட்டக்களப்பில் நடைபெற்றது.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.
திறந்த பாராளுமன்றக் கருத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்படும் தொடர் நிகழ்ச்சிகளில், கம்பஹா மாவட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது நிகழ்ச்சியாக இது அமைந்தது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சந்தன சூரியஆராச்சி, சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபூபக்கர் அதம்பாவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கல்வி மற்றும் உயர்கல்வி, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்கள், போதைப்பொருள் அச்சுறுத்தல், தகவல் அறியும் வாய்ப்புகள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இளைஞர்கள் தங்களது யோசனைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் ஆகிய விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.