சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இரு சீனப்பெண்கள் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இரு சீனப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்களை சுங்க அதிகாரிகள் இன்று (28.08.2026) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றபட்ட சட்டவிரோத சிகரட்டுக்கள் சுமார் ரூ.77 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதி என விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.
சிகரெட்டுகளுடன் இரு பெண் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய இரு சீன வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட சிகரெட்டுகளை மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அவர்களின் 4 பயணப் பொதிகளில் 258 அட்டைப்பெட்டிகளில் 51,600 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு சந்தேகநபர்களையும் தடுத்து வைத்துள்ள சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.