சர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை

சர்ச்சைகளை விட நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை
கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு.
*(ஜலீல் ஜீ – வடக்கு வைத்தியசாலை வளாகத்திலிருந்து)*
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாளர் பணிமாற்றம் மற்றும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றை விட நோயாளிகளுக்கான மருத்துவ சேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
விபத்தொன்றின் பின்னர் இன்று (24) பணிக்கு திரும்பிய அவர், வைத்தியசாலை அதிகாரிகளை கூட்ட மண்டபத்தில் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியசாலையில் சில தனிப்பட்ட மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டபோதிலும், சேவைகள் தடையின்றி தொடர்வதற்கு அனைத்து ஊழியர்களும் வழங்கிய ஒத்துழைப்பு முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.
மருத்துவர்கள், தாதியர்கள், கணக்காளர்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் தமது கடமைகளை சொந்தப் பொறுப்பாக ஏற்று செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், எந்தவொரு தனிப்பட்ட பிரச்சினையும் நோயாளிகளுக்கான சேவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.