கண்டி தேசிய வைத்தியசாலையில் ரூ.8,000 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள்!

நாட்டின் மிக நீண்ட காத்திருப்போர் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் சுமார் ரூ.8,000 மில்லியன் பெறுமதியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இலவச சுகாதார சேவையின் கீழ் நோய் நிர்ணயம் மற்றும் சிகிச்சை சேவைகளை மேலும் திறமையாகவும் முறையாகவும் வழங்கும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ரூ.570 மில்லியன் மொத்தப் பெறுமதியான அதிநவீன மூன்று மருத்துவ உபகரணத் தொகுதிகள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த உபகரணங்களை சிகிச்சைச் சேவைகளுக்காக கையளிக்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி பங்கேற்புடன் இன்று (15) முற்பகல் நடைபெற்றது.
மருத்துவ வசதிகளை நவீனமயமாக்கி, நோயாளர்களின் காத்திருப்பு காலத்தை குறைப்பதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.