கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரம்: எம்.பி. ஆதம்பாவா விளக்கம்

0

9 முஸ்லிம் பெண் ஊழியர்களின் பிரச்சினைக்கு தலையிட்டதாக தெரிவிப்பு

www.iconicmediasl.com

செய்தி: மின்மினி மின்ஹா + ARM. மஜீட்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டுள்ள 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள், ஆடை விவகாரம் காரணமாக கடமையில் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தாம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளை மறந்து, விட்டுக்கொடுப்புடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படை என அவர் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் எம்.பி. ஆதம்பாவா வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் எஸ்.எல். முகம்மது ஹணீபா, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். கரன், உதவி பிரதேச செயலாளர், பிரஜா சக்தி வலயத் தலைவர்கள், சமுர்த்தி வலய முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *