சம்மாந்துறையில் ‘அத்தம’ தேசிய தூய்மைத் தின வேலைத்திட்டம் ஆரம்பம்!

0

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் சமூக ஒற்றுமையுடன் முன்னெடுப்பு

சம்மாந்துறை, ஆகஸ்ட் 08 –
“Clean Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைத் தின வேலைத்திட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (08) செந்நெல் கிராமத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, உழைப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவச் சிந்தனையை உருவாக்குவதே “அத்தம” வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

“Clean Sri Lanka” அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சமூகப் பங்களிப்புடன் வெற்றியடையச் செய்வதே “அத்தம” திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதார கட்டமைப்பில் “அத்தம” என்பது இலாப நோக்கற்ற கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையை குறிக்கிறது. குறிப்பாக கிராமப்புற விவசாய சமூகங்களிடையே, பணப் பரிமாற்றமின்றி ஒருவருக்கொருவர் உடல் உழைப்பை பகிர்ந்துகொள்ளும் உயரிய சமூக நடைமுறையாக இது காணப்படுகிறது.

சம்மாந்துறை செந்நெல் சாஹிரா வித்தியாலயத்தில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் பங்களிப்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர், உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுசைன், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், சமுர்த்தி சமூக அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அஸ்வசும உதவியைப் பெறுபவர்கள் மற்றும் பெறாதவர்கள் என எந்தவித பாகுபாடுமின்றி பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, தமது கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் தூய்மைப் பணிகளில் பங்களிப்பு செய்தனர்.

இதன்போது கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சிரமதானப் பணிகள், கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள், மரக்கன்று நடுதல் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரஜா சக்தி உறுப்பினர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் செந்நெல் கிராமம் 01 CDC அமைப்பு ஆகியவை இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தன.

“சுத்தமான சூழல் – ஆரோக்கியமான சமூகம் – அழகிய இலங்கை!” 🇱🇰

#அத்தம #CleanSriLanka #NationalCleanlinessProgramme #சுத்தமானஇலங்கை #SennalVillage #Sammanthurai #Ampara #SriLanka

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *