மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம்

0

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.

மாகாண சபை மற்றும்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது. இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திரா, சட்டத்தரணி சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *