விவசாயிகளின் பிரச்சினைக்கு அரசு தீர்வு காணத் தவறியுள்ளது – சஜித்
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க தற்போதைய அரசாங்கத்தால் இன்னும் முடியாமல் போயுள்ளது. சமகாலத்தில் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனரென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் வயல்கள் வெளிக்குள் இறங்கி நெற் கதிர்களை வாயில் கடித்துக் கொண்டு ஒரு கிலோவுக்கு ரூ. 150 உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என பிரஸ்தாபித்தனர். இருந்த போதிலும், இன்று வேண்டுமென்றே விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ. 120 க்கு நிலையான விலையை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
இதற்கிடையில் விவசாய அமைச்சர் ஒரு கிலோ நெல்லை உற்பத்திக்கு செய்வதற்கு ரூ. 137 செலவாகிறது எனக் கூறிப்பிடுகிறார். எதிர்க்கட்சியில் இருந்த சமயம் விவசாயிகளினது துயரம் தொடர்பில் பேசி விவசாயிகளை ராஜாவாக்குவோம் என கூறிய அரசாங்கம், இன்று விவசாயிகளை கசிப்புக்காரனாக மாற்றியுள்ளது.
விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 17 நட்டம்
இவ்வாறு விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பொய் கூறி ஏமாற்றியது ஏன் எனக் கேள்வி எழுப்புகிறோம். இன்று விவசாய அமைச்சரிடம் உத்தரவாத விலை பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. நெல் விலை பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும்போது அரசாங்கம் ஊடகங்களை விட்டும் ஒழிந்து செல்கிறது. விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 17 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் ரூ. 120 கு கூட நெல் இல்லை.
இந்த அரசாங்கம் மலையக தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றிவிட்டது.
இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகளையும் மீறி வருகிறது. தோட்டத் தொழிலாளர்களை நாம் பாதுகாப்போம் என இவர்கள் கூறிய போதிலும், இன்று அது எதுவும் நடைமுறையில் இல்லை. அண்மைக்காலமாக தோட்டப் பகுதி மக்களை அந்தத் தோட்டங்களிலிருந்து விரட்டும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றது.
20 வருடங்களுக்கும் மேலாக ராகல லெனார்ட் தோட்டத்தில் வசித்த 6 குடும்பங்களை அந்த தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 1889 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க தோட்டத் தொழிலாளர் (இந்திய) கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24(1), தொழிலாளர் குடியிருப்புகளில் வசிக்கும் ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும் நிர்வாகம் ஒரு வீட்டு வசதியை வழங்க வேண்டும். என்றபோதிலும் இன்று அது எதுவும் வழங்கப்படவில்லை.
அரசாங்க காணி மீட்பு சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த தோட்டப் பகுதி மக்களை சம்பந்தப்பட்ட காணிகளிலிருந்து விரட்டி அடித்து வருகின்றனர்.
இந்த அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டது.
தேர்தல் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றிய இந்த அரசாங்கம், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு காணப்படும் காணி உரிமையையும் இழக்கச் செய்துள்ளது. தோட்டப் பகுதி சமூகத்திற்கு குடியுரிமை மெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொண்டதைப் போலவே இவர்களின் காணி உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தோட்டப் பகுதி மக்களை விரட்டுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. இது தோட்டப் பகுதி மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
டெங்கு தொற்றுநோய் நாட்டில் வேகமாக பரவியுள்ளது. ஆனால் சுகாதார அமைச்சர் மௌனம் காத்து இருக்கிறார்.
இன்று டெங்கு நோய் அதிகரித்து, 77,044 பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகி, 56 பேர் மரணமடைந்துள்ளனர். இது 2023-2025க்கு ஒப்பிடும்போது அதிகரித்த நிலையை காட்டுகின்றது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டமொன்று இல்லை. டெங்கு ஒழிப்பு சேவையில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு நிரந்த தொழில் நியனங்களை பெற்றுத் தருவோம் என்று ஆளும் தரப்பினர் அன்று கூறிய போதிலும், இன்றுவரை அதனை பெற்றுக் கொடுக்கவில்லை.
இவ்வாறு இவர்களுக்கு நி்ரந்த தொழிலை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இப்போதாவது சுகாதார அமைச்சர் இது தொடர்பாக விளக்கம் தர வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு சுதேச ஆயுர்வேத துறையும் அழிவை நோக்கிச் செல்கிறது.
அதேபோல் சுதேச மருத்துவ முறையையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. 700 மாணவர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சைக் கட்டணங்களைச் செலுத்திய போதிலும் அரசாங்கம் இந்தப் பரீட்சைகளை நடத்தாமல் இருக்கின்றது. இதனால் மாணவர்கள் அசாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய கட்டளைச் சட்டங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய மருத்துவத் துறையில் பதிவு செய்ய, உயர்தரப் பாடங்கள் 3 ஐ சித்தியடைய வேண்டும் என்பதால், பாரம்பரிய வைத்திய பரம்பரைகள் அழிந்து வருகின்றன. இலவச பாரம்பரிய வைத்திய பயிற்சிக்காக 11 கல்லூரிகள் இயங்கிய போதிலும் இன்று அவைகூட மூடப்பட்டுள்ளன.
சுதேச மருத்துவத் துறை தொடர்பாக தெளிவான கொள்கை அமைந்து காணப்படாமையினால் ஆயுர்வேத திருத்தச் சட்டமும் மாற்றப்பட வேண்டும். சுதேச மருந்துகள் பல போக்குவரத்திற்குக் கூட தடை செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் சுதேச மருந்துகள் காணப்பட்ட போதிலும், வெளிநாட்டு சுதேச மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதால் நாட்டிற்கு அந்நிய செலாவணியும் இழக்கப்படுவதால், இது தொடர்பாக கவனம் செலுத்தி, சுதேச மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமொன்று அவசியமாக காணப்படுகின்றன.
யாப்பஹுவ பிரதேசத்தில் அமைந்துள்ள அங்கம்புர மையம் குறித்து கவனம் செலுத்தி பாரம்பரிய உள்நாட்டு மருத்துவத் துறையை வலுப்படுத்தும் திட்டங்களை மீண்டும் முன்னெடுக்க வேண்டும்.
வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை பிரதான பாடங்களாக ஆக்குங்கள்.
அதேபோல் தொகுதி (மொடியூல்) முறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள். பிரதான பாடமாக அமைந்து காணப்பட வேண்டிய வரலாறு மற்றும் அழகியல் தேசியப் பாடசாலை பாடத்திட்டத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் என்பன கட்டாயப் பாடங்களாக ஆக்க வேண்டும். இதற்கான முன்மொழியப்பட்ட கால சட்டகத்தையும் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.