2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை 

0

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அதன் தலைவர் கலாநிதி பிரதீப் பிரியதர்ஷன கருத்துத் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 750 மெகாவோட் மின்சாரத் திறனை மின்கலங்கள் மூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால், இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, தற்போது மின்கலங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அவற்றை மின் கட்டமைப்போடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே 160 மெகாவோட் மின்கலங்கள் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கு மேலதிகமாக, மேலும் 250 மெகாவோட் மின்சாரத்திற்காக தனியார் துறையின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவும் எதிர்வரும் ஆண்டின் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 100 மெகாவோட் மின்சாரத்தை மின் விநியோக நிறுவனம் மூலம் வழங்குவதற்காக ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனைத் தவிர தரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மின்கலங்களைப் பொருத்துவதற்காக 150 மெகாவோட்டிற்கான ஏலங்களைக் கோர எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

 இந்த அனைத்து நடவடிக்கைகள் மூலமும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் தேசிய மின் கட்டமைப்பில் மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 750 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும் என்பதால், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வழிவகை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

 மேலும், 2028-2029 ஆம் ஆண்டுகளில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதனுடன் இணையாக மின்கல கட்டமைப்பையும் இணைப்பதன் மூலம் எரிபொருள் மூலமான மின் உற்பத்தியையும் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

 இதன் மூலம் 30 முதல் 35 பில்லியன் ரூபாய் வரையான தொகையைச் சேமிக்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இதன் பலனைப் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும் என மேலும் தெரிவித்தார்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *