தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் நிறைவு!
வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 27.7 கிலோமீற்றர் நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதிக்கட்டமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வடமத்திய மற்றும் வட மாகாணங்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.சுரங்கப்பாதையின் நீளம்: 27.7 கிலோமீற்றர்பயன்படுத்தப்பட்ட TBM இயந்திரங்கள்: 2நீர்ப்பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள்: 74,000 ஹெக்டேயர் பயனடையவுள்ள மக்கள்: சுமார் 15 இலட்சம் பேர்இதன் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் 2022ஆம் ஆண்டு அனுராதபுரம், பலுகஸ்வெவ–மஹமீகஸ்வெவ பகுதியிலிருந்தும், இரண்டாம் கட்டப் பணிகள் 2023ஆம் ஆண்டு பொலன்னறுவை, எலகஹர–கொந்துருவாவ பகுதியிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டன.அகழ்வுப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று காலை அனுராதபுரம், பலுகஸ்வெவ பகுதியில் விசேட நிகழ்வொன்றும் நடைபெற்றது.இந்தச் சுரங்கப்பாதையின் ஊடாக வட மாகாணத்திலுள்ள 74,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன நீர் கொண்டுசெல்லப்படவுள்ளது. வறண்ட வலய மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப் பிரச்சினையைத் தணிப்பதற்கும் இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ரஜரட்ட பிரதேசத்தில் நிலவும் காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்குத் தூய குடிநீர் வழங்கல் உதவும் என்றும் நம்பப்படுகிறது.