சம்மாந்துறையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது – வாகனங்கள் பறிமுதல்

சம்மாந்துறை பகுதியில் சில இளைஞர்கள் தலைக்கவசம் (Helmet) அணியாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் பயணித்ததுடன், வீதியை மறித்து பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் செயற்பட்டமை பதிவாகியிருந்தது.இந்தக் காணொளி நாடு முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணையின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிய பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விசேட சுற்றிவளைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கை, SDIG வருண ஜயசுந்தர, DIG சுஜித் வேதமுல்ல மற்றும் SSP KTPB. கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி CI நிசாந்த பிரதீப் குமார, போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி SI விஜயவர்தன, குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி SI சமீர மற்றும் PCD 80294 தனுஷ்க ஆகியோரின் தலைமையில் பொலிஸ் குழுவினர் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் வீதிகளில் ஆபத்தான மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், CI நிசாந்த பிரதீப் குமார அவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பை ஏற்றதிலிருந்து, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ரது