
www.iconicmediasl.com
இலங்கையில் விரைவில் சட்ட நடவடிக்கை
ஹெட்போன் அல்லது இயர்போன்களை அணிந்துகொண்டு இசையைக் கேட்டவாறு வீதிகளில் நடப்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை போக்குவரத்து பொலிஸ் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஹெட்போன் பயன்படுத்துவதால் சுற்றுப்புற வாகனங்களின் ஒலி கேட்காமல் போவதால், பாதசாரிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது இதுபோன்றவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துகளால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிக வேகம், போக்குவரத்து விதிமீறல், கவனக்குறைவு மற்றும் வாகனங்களின் முறையற்ற பராமரிப்பு ஆகியவை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 3 கிலோமீட்டர் தூரம் வரை வாகன வேகத்தை கண்டறியும் அதிநவீன வேகமானிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்