🔴 2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு சிறைத்தண்டனை – சொத்துக்கள் அரசுடைமை!

கொழும்பு: 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் இடம்பெற்ற இந்த வழக்கில், கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு நேற்று (22) தீர்ப்பை வழங்கியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேருக்கு 220 ஆண்டுகள், நான்கு பேருக்கு 240 ஆண்டுகள், ஐந்து பேருக்கு 200 ஆண்டுகள் மற்றும் ஒருவருக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை விதிக்கப்பட்ட 15 பேருக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடைமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் சுமார் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற விசாரணைகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் அரச தரப்பு சார்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தனர்.
🔴 Iconic Media
“ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்!”
200–260 ஆண்டுகள் சிறை | சொத்துக்கள் அரசுடைமை!