பண்டாரவளை நகரம் நீரில் மூழ்கியது! கனமழையால் மக்கள் அவதி 🌧️🌊

நேற்று (03) மாலை பெய்த கனமழையினால் பண்டாரவளை நகரம் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஊவா மாகாணத்தில் கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கனமழை பெய்துள்ளது.
கடந்த காலங்களிலும் கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பண்டாரவளை நகருக்குள் இவ்வாறு மழைநீர் புகுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதசாரிகள், பயணிகள், வாகன சாரதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பண்டாரவளை நகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, நகரில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் கால்வாய்கள் மறிக்கப்பட்டு அத்துமீறி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கால்வாய்களை தூர்வாரி முறையாக சீரமைப்பதுடன், சட்டவிரோதமான முறையில் கால்வாய்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் கனமழையினால் பண்டாரவளை நகரம் மீண்டும் நீரில் மூழ்குவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான கோரிக்கையாகும்.