அரச ஊழியர் சீருடையில் மாற்றம்: அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியே தீர்வு

அரசாங்க ஊழியர்களின் உத்தியோகபூர்வ சீருடைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், தனிப்பட்ட முறையில் தீர்மானிக்காமல், உரிய திணைக்களங்களின் சீருடைக் குழுக்கள் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு காணப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கைகளின்படி, உத்தியோகபூர்வ சீருடை வழங்கப்பட்டுள்ள ஊழியர்கள் கடமையில் ஈடுபடும் போது அந்த சீருடையை அணிய வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், கலாசார அல்லது மதத் தேவைகளின் அடிப்படையில் சீருடையில் மாற்றம் கோரப்பட்டால், அது உரிய சீருடைக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையில் சீருடைகள் தொடர்பான தீர்மானங்களை சுகாதார அமைச்சின் சீருடைக் குழு மேற்கொள்வதாகவும், அந்தக் குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இயங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை இலகுவாக அடையாளம் காண்பதுடன், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தவும் முறையான சிகிச்சை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் சீருடைகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, கலாசார மற்றும் மத உணர்வுகளை கருத்திற் கொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பெண்கள் அதிகளவில் சுகாதாரத் துறையில் இணைந்து வரும் நிலையில், சீருடை தொடர்பான பிரச்சினையை காரணமாகக் கொண்டு அவர்கள் சுகாதாரத் துறையில் இணைவதைத் தடுக்க அரசாங்கம் விரும்பவில்லை எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.